Sunday, August 24, 2008

சுனாமி பெண்


கண்ணம்மா -

காத்திருந்தேன் பத்து மாசம்

கண்ணு நெறைய கனாவோட

ரோசாப்பூ நீ மலர

கோயிலுக்கும் நேர்ந்திருந்தேன்

கடலம்மா நுரைதள்ளி என்

கணவனை தான் காவுவாங்க

சுனாமி தான் என் மனச

சுக்கு நூறா நொறுக்குதடி

மகளே உன் வாசத்த

முகரும் முன் மரிச்சாரே

மகராசன் உங்க அப்பன்

முத்துக்கு சிப்பி போல

முழுநேரம் நான் காக்க

கண்ணுக்கு மணி போல

என்னைத்தான் நெனச்சாரெ

ரகசியமா சேர்த்து வச்சு

ராட்சச அலை வந்து

காணி நிலம் கூட

கிடைக்காம அழிச்சாலும்

கண்மணியே உன் பொறப்பு

கடவுளோட வரமடி

கண்ணீரில் கண்ணு வலிக்க

கேள்விக்குறியா நான் பார்க்க

தூக்கத்தில் உன் சிரிப்பு

துக்கத்தை குறைக்குதடி

மார்போட நான் அணைச்சேன்

மக்காத என் சொத்தை

மகராசி நீ தானே

மனசுக்கு நம்பிக்கை!!

No comments: