Saturday, August 17, 2019

எதிர்பார்ப்புகள்

உன் தலைகோத விரல் தேடும் மனதுக்குள் காதல் 

உன் விலகாத வலியெல்லாம் பிறர்க்குத் திணித்தென்ன மோதல் 

உன் சுகம் மட்டும் தானா சார்ந்தோரின் வாழ்க்கை 

ஏன் எண்ணத்தில் வாராதோ தெளிவான வேட்கை 

மனதோடு பேசு, அயராமல் ஓடு 

கனிவான நெஞ்சோடு வையத்தில் நடைபோடு 



உன் இன்பம் - சில தேவைகள் 

உன் துன்பம் - பேராசைகள் 

உன் வாழ்க்கை - சில தேடல்கள் 

உன் போக்கு - எதிர்பார்ப்புகள் 

எதிர்பார்ப்பு - அதை போக்கு 

உன் இல்லம் - உன் சொர்க்கம் 

உன் கோபம் -  உன் நரகம் 

எதிர்பார்ப்பு - அதை போக்கு

உன் வேலை - பூஞ்சோலை 

உன் பாதை - நீரோடை 



உன் வாழ்வின் புதிர்க்கெல்லாம் விடை நீ மட்டும் அறிவாய் 

உன் சோர்வின் நிலைக்கெல்லாம் வழி நீயாகவே உணர்வாய் 

அச்சங்கள் கொள்ளாமல் பிறர்மீதும் திணிக்காமல் நிறைவோடு போராடுவாய்




உன் வரவு - சில உறவுகள் 

உன் அச்சம் - சில பிரிவுகள் 

உன் நோக்கம் - சில வெற்றிகள் 

உன் தேவை - சில தனிமைகள் 

உன் வாழ்க்கை - உன் எண்ணம் 

உன் எல்லை - உன் வானம்!

Sunday, May 3, 2015

ரசித்து சுவாசிக்கிறேன்


பூவிதழ் பார்வையில்
மந்திர மொழியில்
ரீங்கார அழுகையில்
பனிக்கும் புன்னகையில்
நீ வெல்கிறாய்
நான் உறைகிறேன்

நாளும் தவழும் பொழுதிலும்
தத்தி நடக்கும் பொழுதிலும்
எனைத் தழுவும் பொழுதிலும்
மார்பில் உறங்கும் பொழுதிலும்
நீ உணர வைக்கிறாய்
நான் உலராமல் வாழ்கிறேன்



நீ பூத்த நன்னாளாம்
என் திமிருடைந்தத் திருநாளே
நமது ஒவ்வொரு நொடியிலும்
வழிநடத்தி நீ முன் செல்கிறாய்
அமைதியாய் உன் பின் செல்கிறேன்
நீ வேறுலகம் காட்டுகிறாய்
நானதில் ரசித்து சுவாசிக்கிறேன்


Sunday, January 20, 2013

பூங்கொத்து





இனிய உறவே
புதிய வரவே 
உனைக் காணவே
கண்கள் பனிக்குதிங்கே 


காத்திராமல் தாழ்திறந்து
பூத்திராயோ பூந்தளிரே 


என் சுண்டு விரலின் நுணியை
உன் பிஞ்சுக் கையுள் பற்றி 
புன்னகைப்பாயோ உறக்கத்தில்

என் மூச்சுக் காற்றின் வெப்பத்தில்
சஹானா ராகத்தில் அழுதிடாயோ
உனது தேன் குரலில்


உன் நித்திரையை நித்தம் கண்டு
ரசித்திடுவேன் பக்கம் வந்து
நீ மிதித்தாலும் இன்னும் கொஞ்சம்
என் நெஞ்சம் தான் உந்தன் தஞ்சம் 


மயிலுக்குத் தோகை சுமையா 
கடலுக்கு மீன்கள் சுமையா 
பூவுக்குத் தேன் தான் சுமையா 
பாட்டுக்கு இசை தான் சுமையா 


இனிமேல் என் எஞ்சிய காலம் 
நிச்சயம் உன் வசந்த காலம் 
சுகமான சுமைகள் தருவாய் 
பரிவோடு பாசம் தருவேன் 
எப்பொழுதும் சேட்டை புரிவாய் 
எண்ணோடு எழுத்தும் தருவேன் 
உன்னுடைய கனவுகள் வாழ 
என்னுடைய உயிரும் தருவேன்.




Sunday, December 30, 2012

விருப்பப்பட்டியல்



வருட இறுதி 
கால நியதி 

புதிய வருடம் 
பரந்த உலகம் 

என்றும் வழங்கும் 
வாழ்க்கை கழகம் 

புத்தம்புது  காலை
பூஞ்சோலை 

நிறைந்த வேளை
நிலையான வேலை 

வேண்டும் வேண்டும் 
கொஞ்சம் வெற்றி 
கொஞ்சம் தோல்வி 
புதிய வேள்வி 
புதிய கேள்வி 
தேடலில் வியர்வை 
ஆற்றலில் பொய்கை 


வேண்டும் வேண்டும் 
சின்ன வலிகள் 
மாய காயம் 
சொச்ச அசதி 
மெத்த பக்தி 
கூர் புத்தி 
நெழிவு சுளிவு 
தெரிந்த பணிவு 
தெளிந்த மனது 


வேண்டும் வேண்டும் 
உள்ளம் உருகும் 
இனிய இசையும்
பாரதி பாட்டும் 

மாற்றம் இல்லா 
அன்னை அன்பும்
தந்தை நெறியும் 
சதியின் நட்பும்
காதல் இதயம் 
வேண்டும் வேண்டும் 

பிள்ளை பேறும் தங்கும் இல்லம் 
வேண்டும் வேண்டும் 
கனிந்த உள்ளம் 
கொண்ட இறைவன் சித்தம் 
இவை நடக்க வேண்டும் 


வேதம் வேண்டும்
நாதம் வேண்டும் 
கவிதை வேண்டும்
எழுத நேரம் வேண்டும் 

இயங்க வேண்டும்
இயக்க வேண்டும் 
அள்ள அள்ள வாழ்வில் 
அன்பு வேண்டும்.

Tuesday, November 16, 2010

இல்லாள்

மெல்ல மெல்ல பக்கம் வந்து
குட்டி குட்டி கண்கள் கொண்டு
திறந்து மூடி நெஞ்சைக் கொய்து
சிறையில் வைக்கிறாய்.


பூத்திராத சின்ன மொட்டு
இதழில் நீரைக் கொஞ்சம் வைத்து
உறங்கும் போதும் உலவும் போதும்
விருந்து வைக்கிறாய்.


பதறி விரைந்து சமைக்கும் நேரம் - உன்
கலைந்த ஓரக் கூந்தல் ஈரம் - என்
இதயத் துடிப்பை நிறுத்திச் செல்லும்.


நீ அமைதியாக உறங்கும் நேரம்
அதிகாலை சற்றே விழித்த நேரம்
உன் ஈரக் கூந்தல் உலரும் நேரம்
என் எண்ண ஓட்டம் மின்னல் வேகம்..




கொஞ்சிப் பேசி கெஞ்சும் போதும்
மழலை சிரிப்பில் மயக்கும் போதும்
அக்கு வேராய் ஆணி வேராய்
என்னைக் கொல்கிறாய்!!

Wednesday, January 27, 2010

மோட்ச வாசல்




மனதோடு மனது
கலக்கின்ற பொழுது
மயக்கங்கள் தருகின்றது.

இதயத்தின் வலிகள்
உன் இதழ் பொழியும் அன்பில்
இதமாகத் தணிகின்றது.

உனை மார்போடு தழுவத் துடிக்கின்ற கரங்கள் -
நாணத்தை விடுத்து புதுத்தேடல் கொள்ளும்
கண் பேசும் பரிபாஷை முடிகின்ற இரவில் -
கண் தவிர மற்றவை தான் விளையாடிடும்.



காமத்தின் முடிவில்
என் நெஞ்சோடு நீ உறங்கும்
தருணங்கள் சுகமானது.

மோட்சத்தின் வாசல்
சேர்கின்ற பொழுது
நம் கண்கள் மழை பொழியுது !!

Thursday, May 14, 2009

பேரின்பம்


சிந்திடும் வியர்வைத் துளி - உனக்கு
நம்பிக்கை வளர்த்திடும் பள்ளி - வாழ்க்கை
உழைக்க உழைக்க கொள்ளை அழகடா!

இதை எண்ணிய வேளையில் நீயும்
கதை கட்டிடும் வேலையை விட்டு
சதை தேய்ந்திட மேம்பட உழைப்பாயடா!

தூற்றுவோர் தூற்றலில் என்றும்
சாக்கடை நாற்றமே மிஞ்சும்
இதை கருத்திலே என்றுமே எண்ணிக் கொள்ளடா!

உழைப்பிலே கண்ணியம் கொண்டு
காதலாய் தொழிலையும் கண்டு
வாழ்ந்திடும் வாழ்க்கையில் உண்டு பேரின்பமடா!!

Thursday, May 7, 2009

குருநிலை


இயற்கை இவ்வுலகில் சொல்லும் விஷயங்கள்
நாளும் நம்வாழ்வில் கற்கும் பாடங்கள்
வாழ்கை மலர்மஞ்சம் மூடன் பக்கத்தில்
நாளும் புதுஅனுபவம் ஏகன் பக்கத்தில்



கல்லுக்குள் மறைந்திருக்கும் சிற்பங்கள் யாவும்
வலி தாங்கி உருமாறி புகழ்மாலை சூடும்
கொதிக்கின்ற ரத்தத்தின் வெப்பத்தில் விதியும்
எதிர்நோக்கி அடிவைக்க நம்பக்கம் வளையும்
அடிவாங்கி வலிதாங்கும் உலகின்பொருள் யாவும்
மின்னாமல் வெல்லாமல் கனவிலும் நிகழ்ந்திடுமோ?

வீரத்திருமகனே!
நீ தோல்விக்கு அஞ்சாமல்
உன் வேள்வியை முடிக்காதே
நீ வேதனை தாங்காமல்
இங்கு சாதனை கிடையாதே!!

Friday, May 1, 2009

நெஞ்சமெல்லாம்..


வற்றாத வார்த்தை இருந்தும் பற்றாதே என் சுவட்டில்


கல்லாத பாடம் ஒன்று நெஞ்சோடு மனக்கூட்டில்


எவ்வாறு நானும் முயல உன்னை புரிய வைக்க


காட்டாற்று வெள்ளத்தில் உயிர் சிக்கி பரிதவிக்க


துடிக்கும் இதயம் மறந்தேன் - திமிரிழன்தேன்.



இதயம் இரண்டும் மொழியும் பொழுது உயிர்கள் கலக்கும்


இதை வார்த்தையால் பரிமாற நினைக்க தேகம் வெடிக்கும்



உயிரோவியம் என் மனதுக்குள்ளே பலகாவியம் படைக்கும்


வெறும் கூற்றினால் வெளியில் சொன்னால் புனிதம் கெடுக்கும்


வழி காட்டி நீ வலி தருகிறாய்


புள்ளி கோலமாய் இணைகிறாய்!!

Thursday, January 29, 2009

பூஜா




உன் நினைவில் நனைந்திடவே
பிடிக்கிறதே பனித்துளியே
துளித்துளியாய் தேன்துளியாய்
கலந்திடுவாய் ஜீவனிலே

பார்த்தால் நீ பனித்துளியோ
பழக்கத்திலோ தேன்துளியோ
புன்னகையோ பௌர்ணமியோ
நம் காதல் வளர்பிறையோ!!

தாலாட்டும் குரலில் மயிலிறகாய் வருடும்
உன் அழைப்பைத் தேடும் தொலைபேசி கருவி
உறங்காமல் உளறும் உறக்கத்திலோ சிரிக்கும்
கனவோடும் வருவாய் கற்பனையும் பிறக்கும்



நெஞ்சில் சிறு வலியோடு கண்ணின் இமை மூடாது
அலைந்தேனே சிலகாலம்
கண்ணில் புது பொலிவோடு வந்தாய் நீ தேவதையே
இனிமேல் நம் பொற்காலம்



உன் மடியில் உறங்கிடவே
துடிக்கிறதே இரு விழியே
உன் அணைப்பில் வாழ்ந்திடவே
காத்திருப்பேன் கண்மணியே!!